சோல்பரி கமி’ன் முன்பாக ஜ.ஜ. கூறிய கருத்துகள் இன்றும் முக்கியத்துக்குரியவை

தமிழ் மக்களின் உரிமைக்காகவும் நலன்களுக்காகவும் இறுதிவரை உழைத்த மாபெரும் தலைவர் ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் 114 வது பிறந்த தினம் (08.11.2015) நாளை ஆகும்.

இங்கிலாந்தில் சட்டப்படிப்பை பூர்த்தி செய்து பட்டம் பெற்று இலங்கை திரும்பிய ஜீ.ஜீ. பொன் னம்பலம் சட்டத்துறையில் மிகவும் பிரபல்யம் பெற்ற சட்டத்தரணியாக விளங்கினார். சட்டத்துறையுடன் நின்றுவிடாது அரசியலிலும் பிரவேசித்து தமிழர்களின் சமுதாய அரசியல் ஏற்றத்துக்காகவும் கடுமையாக உழைத்தவர். 1927 ம் ஆண்டு அளவில் இலங்கை உயர் நீதிமன்ற அப்புக்காத்தாக தன்னைப் பதிவு செய்து கொண்ட அவர் அப்போதே அரசியலிலும் ஈடுபட்டார்.

அக்காலத்தில் டொனமூர் கமிஷன் சிபாரிசுகள் இந்நாட்டில் வெளியிடப் பட்டிருந்தன. இச்சிபாரிசுகளை அப்போதைய பெரும் தலைவர் சேர். பொன். இராமநாதன் ஆட் சேபிப்பதற்காக லண்டன் பயணமா னார்.

அந்த நேரத்தில் இங்குள்ள சில தமிழ் அரசியல் பிரமுகர்கள் அச்சிபார்சினை ஏற்க முடிவு செய்தார்கள்.

1929ம் ஆண்டு கொழும்பில் சில தமிழ்ப் பிரமுகர்கள் இச்சிபார்சுகளை ஏற்கும் பொருட்டுத் தீர்மானம் எடுப்பதற்காக கொழும்பில் கூட்டம் கூடினார்கள். அக்கூட்டத்திற்கு வந்திருந்த இளைஞரான ஜீ.ஜீ. பொன்னம்பலம் அக்கமிஷனின் சிபாரிசுகளால் ஏற்பட இருக்கும் தீமைகளைச் சுட்டிக்காட்டி சிபாரிகளை ஏற்கக் கூடாதென்ற தீர்மா னத்தை முன்மொழிந்தார். தீர்மானம் அதிகப்படியான வாக்குகளால் நிறை வேறியது. அன்று தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஜீ.ஜீ. பொன் னம்பலம், சேர் பொன் இராமநாதன் மறைவிற்குப் பின்பு தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்தார். இந்நாடு சிங்கள நாடு என்றும் அது சிங்களவருக்கே சொந்தமென்றும் ஓர் எண்ணம் வலுப்பெற்றிருந்த நிலையில் சிங்கள மகா சபையை பண்டாரநாயக்க தோற்றுவித்தார்.

சிறுபான்மையினரை ஒதுக்கும் திட்டமிட்ட சூழ்ச்சியை உணர்ந்த ஜீ.ஜீ. பொன்னம்பலம் தமிழர்களின் குரலாக இருக்கும் பொருட்டு அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸை 29.08.1944 ல் நிறுவினார். அக்கட்சி அன்றுதொட்டு தமிழர்களின் பாது காவலனாக இருந்து வந்தது. ஜீ.ஜீ. அவர்களின் மறைவின் பின் அவரது தனயன் குமார் பொன்னம்பலம் கட்சியின் தலைமையை ஏற்று தமிழனத்திற்காக குரல் கொடுத்து வந்தார்.

அமரர் ஜீ.ஜீ. 1939 ல் அரச சபையில் சமநிலைப் பிரதிநிதித்துவம் பற்றிய தமது உரையில் கூறியதாவது, தமிழ்ச் சமூகத்தின் நிலைப்பாடு என்ன? எமது நிலைப்பாடு இதுதான் என நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன். இந்நாட்டின் பூர்வீகக் குடிகளாக நாம் இங்கு வாழ்ந்து வந்திருக்கின்றோம். தமிழ் சமூகத்தின் ஒரு கிளையினர் சிங்களவர்களை விட நீண்டகாலம் இங்கு வாழ்ந்து இருக்கின்றனர்.

இதுவே எமது தாயகம், அரசியல் ரீதியாகவும் வேறு வகையிலும் நிரந்தர உரித்துக்களை கோருவதற்கு சிங்கள மக்களுக்கு உள்ள அதே உரிமை எமக்கும் உண்டு. நாம் வேண்டப்படாத அந்நியர்களாக நடத்தப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. நாம் மத்திய ஐரோப்பாவின் நாசி நாடுகளில் யூதர்களைப் போன்று “கெட்டோக்கலில்” பிரித்து நடத்தப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது” இவ்வாறு ஜீ.ஜீ. கூறினார்.

சோல்பரி ஆணையாளர்களினால் சரிசமநிலையான பிரதிநிதித்துவக் கோட்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால் அதன் பின்னர் 1956, 1958, 1977 மற்றும் 1983ம் ஆண்டுகளில் திட்டமிட்ட இனப்படுகொலைகளை தவிர்த்திருக் கலாம் என்பதுடன் தமிழர்களை இரண்டாந்தரப் பிரஜைகளாக்கி அவமானப்படுத்திய அருவருக்கத்தக்க “சிங்களம் மட்டும்” சட்டத்தையும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியிருக்க முடியாது போயிருக்கும்.

1945ல் தமிழ் காங்கிரஸ் சார்பில் ஜீ.ஜீ. பொன்னம்பலம் சோல்பரிக் கமிஷனர் முன் தோன்றி சிறுபான்மை மக்களின் நிலையை விளக்கியதோடு சம பிரதிநிதித்துவக் கோட்பாட்டை முன்வைத்தார்.

சிங்களவருக்கும் ஏனைய சிறு பான்மை இனத்தவருக்கும் பாராளு மன்றத்தில் சமபலம் இருக்க வேண்டும் என்பதே இக்கோட்பாடாகும். தமி ழர்களுக்கு வரப்போகும் இடர்களை முன்கூட்டியே அறிந்தபடியால் அவை வராமல் தடுப்பதற்காக இக்கோட்பா ட்டை முன்வைத்தார்.

1983 ல் கனடாவில் இவ்விடயம் தொடர்பாக ஆராயப்பட்டது. பலநாட்டு அரசியல்சாசன அறிஞர்கள் கூடி பல நாட்டு அரசியல் சாசனங்களை ஆராய் ந்திருந்த நிலையில் பல மொழி பேசும் மக்கள் வாழும் நாட்டில் சமபிரதி நிதித்துவ முறையே உகந்த அரசியல் சாசனமாகும் எனக்கருத்து தெரிவித்திருந் தார்கள். இப்பொழுதும் கூட அதனை விளங்கிக் கொள்ளாதவர்கள். 1948ம் ஆண்டில் ஜீ.ஜீ. பொன்னம்பலம் இதனைக் குறிப்பிட்ட பொழுது அதனை எவ்வாறு விளங்கிக் கொண் டிருக்க முடியும் என்று கொழும்புப் பல்கலைக்கழக சட்டத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் வி.ரி. தமிழ்மாறன் அவர்கள் எழுதியுள்ளார்.

சோல்பரிக் குழுவினர் சமபிரதி நிதித்துவக் கோட்பாட்டை ஏற்கா விடினும் ஜீ.ஜீ.யின் வாதத்தின் காரணத்தால் 29ம் பிரிவு போன்ற சில பாதுகாப்புகளை சிறுபான்மையினரின் நன்மை கருதி அரசியல் சாசனத்தில் உட்புகுத்த வேண்டுமென சிபார்சு செய்தனர்.

இலங்கையின் எப்பாகத்திலும் சம உரிமையோடு சமபங்காளிகளாக வாழ முடியாவிடில் தமிழ் மக்கள் பிரிந்துதான் வாழவேண்டும் என்பது அவர் கருத்தாக இருந்தது. தனிச் சிங்கள மசோதா பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது அம்மசோதா அமுல்படுத்தப்பட்டால் நாடு பிளவுபடும் என்பதை அவர் பாராளுமன்றத்தில் அன்றைக்கே எடுத்துரைத்தார்.

1947ம் ஆண்டுத் தேர்தலின் பின் ஒரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான கட்சிகள் ஒன்று சேர்ந்து ஸ்ரீ சிசங்கவின் வீட்டில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக ஓர் அரசை அமைப்பதற்கு ஆலோசனை செய்தனர். யமுனா மாநாடு என்றழைக்கப்பட்ட இந்த மாநாட்டுக்கு தலைமை தாங்கிய பெருமை அமரர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்களையே சாரும். இடது சாரிகளுக்கிடையில் ஒற்றுமையின்மையால் இம்மாநாடு தோல்வியில் முடிவடைந்தது.

1976 ஜனவரி 30ம் திகதியன்று கருணாநிதியின் தமிழ்நாடு அரசாங்கம் ஊழல் குற்றச்சாட்டுக்களின் பெயரில் இந்திராகாந்தியின் மத்திய அரசாங்கத்தால் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர் சர்க்காரியா தலைமையில் தனிமனித விசாரணை ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. சட்டத்திறமைக்கு பெரும்புகழ் பெற்றிருந்த ஜீ.ஜீ. பொன்னம்பலம் கலைஞர் கருணாநிதியின் கோரிக்கையின் பேரில் ஆணைக்குழுவின் முன் தோன்றி வாதிட்டார். மத்திய மாநில அரசு உறவில் பின்பற்றுகின்ற இரட்டைத்தரங்களை ஆழமாக ஆராய்ந்து விளக்கிய அவர் சாட்சியம் அளிக்க இருப்பவர்களை குறுக்கு விசாரணை செய்ய அனுமதியளிக்கும்படி கோரினார். ஆனால் நீதியரசர் அதனை நிராகரித்தார். அப்போது ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்கள், கருணாநிதி மீது பழிவாங்கும் நோக்குடன் “கங்காரு” நீதிமன்றத்தின் இயல்பும் தொழிற்பாட்டு நடைமுறைகளும் இருக்கின்றன என சட்டவாதங்களுடன் வெளிப்படுத்தினார்.

பின்னர் தமிழ்நாட்டு வழங்கறிஞர்களைக் கொண்டதான தமது உயர் வழங்கறிஞர் குழுவினருடன் வெளிநடப்புச் செய்து அந்நீதிமன்ற விசாரணைகளைத் தொடர்ந்தும் பகிஷ்கரித்தார். அதுவே ஆணைக்குழுவின் கலைவிற்குக் காரணமாக அமைந்ததைத் தொடர்ந்து கருணாநிதி வெற்றியீட்டினார். பின்னர் மெரினா கடற்கரையில் உள்ள சீரணி அரங்கத்தில் கலைஞர் கருணாநிதி அவர்களால் நடத்தப்பட்ட மாபெரும் நன்றி பாராட்டு நிகழ்வில் “உண்மையான நட்பிற்கு சங்கத் தமிழ் இலக்கியம் வகுத்துரைத்துள்ள உயர் ஒழுக்க விழுமியங்களை ஜீ.ஜீ. புதுப்பித்தொழுகியுள்ளார்” என்று அவரைப் பாராட்டினார்.

அமரர் அப்பாப்பிள்ளை அமிர்த லிங்கம் மற்றும் மூன்று பாராளு மன்ற உறுப்பினர்கள் மீதான யூர ர்கள் இல்லாத (ட்ரயல்- அற்- பார்) நீதிமன்றத்தில் அவர்களுக்காக வாதாடி அந்த நீதிமன்றம் அதனை விசாரிக்க உரித்துடையதல்ல என்ற சட்ட நுட்பத்தை எடுத்துரைத்து அவ்வழக் கினைத் தகர்த்தெறிந்தார். மிகத் திறமையான குற்றவியல் வழக்கறி ஞராக திகழ்ந்த இவர் றஞ்சனி டக்ஸி கப் வழக்கில் இங்கிலாந்தில் இரு ந்து வருகை தந்து சாட்சியமளித்த கைவிரல் அடையாள நிபுணரை குறுக்கு விசாரணை செய்ததைத் தொடர்ந்து கைவிரல் அடையாளம் பற்றிய சட்டமே திருத்தியமைக்கப் பட்டது.

தற்போதைய அரசாங்கம் புதிய அரசியல் சாசனமொன்றை அறிமுகம் செய்வது பற்றி சிந்திக்கும் இவ்வேளையில் ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்கள் சோல்பரி கமிஷன் முன் தோன்றி ஆற்றிய உரையில் குறிப்பிட்டிருக்கும் சிபாரிசுகளையும் கருத்திலெடுத்து ஆராய்வது தமிழ் பேசும் மக்களது நலன்சார்ந்த மிகவும் ஆரோக்கியமான விடயமாக இருக்கும்.

அப்பாத்துரை விநாயகமூர்த்தி
(சிரேஷ்ட சட்டத்தரணி,
முன்னாள் எம்.பி.
அ. இ. த. காங்கிரஸ்
முன்னாள் தலைவர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>