சூரிய மின்சாரம் உற்பத்தி செய்ய ஒரு கிலோ வாட்டுக்கு 20000 ரூபாய் முதலீட்டு மானியம்

jaya“வீட்டு கூரைகளில், சூரிய மின்சாரம் உற்பத்தி செய்வோருக்கு, ஒரு கிலோ வாட்டுக்கு, 20 ஆயிரம் ரூபாய், முதலீட்டு மானியம் அளிக்கப்படும்,” என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சட்டசபையில், 110வது விதியின் கீழ், அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:புதுப்பிக்கத் தக்க எரிசக்தி மூலம், தமிழகத்தில், 7,140 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. சூரிய சக்தியை பயன்படுத்தி, மின் உற்பத்தி செய்வதில், தமிழகத்தை முன்னிலையில் கொண்டு வர, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுளளன. மூன்றாண்டுகளில், 3,000 மெகா வாட் சூரிய மின் உற்பத்தி செய்ய, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சூரிய மின் உற்பத்தியை, மக்கள் இயக்கமாக மாற்றவும் திட்டமிடப்பட்டு உள்ளது. வீட்டு கூரைகள் மீது, சூரிய மின் உற்பத்தி சாதனைங்களைப் பொருத்தவும் ஊக்குவிக்கப்படுகிறது.

இதற்கு, புதிய மற்றும் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி அமைச்சகம், 30 சதவீத மானியம் வழங்குகிறது. இதோடு சேர்த்து, யூனிட்டிற்கு முதல் இரு ஆண்டுகளுக்கு, 2 ரூபாயும், அடுத்த இரு ஆண்டுகளுக்கு, 1 ரூபாயும், மேலும் இரு ஆண்டுகளுக்கு, 50 பைசாவும், தமிழக அரசின் சார்பில், ஊக்கத் தொகையாக அளிக்கப்படுகிறது.இந்நிலையில், சூரிய மின் உற்பத்திக்கு, முதலீட்டு மானியம் அளிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. இதை ஏற்று, வீட்டு கூரைகள் மீது, சூரிய மின் உற்பத்தி செய்வோருக்கு, ஒரு கிலோ வாட்டுக்கு, 20 ஆயிரம் ரூபாய், முதலீட்டு மானியம் அளிக்கப்படும். இதன்மூலம், முதல் கட்டமாக, 10 ஆயிரம் வீட்டு மின் நுகர்வோர் பயன் பெறுவர்.

ரூ.5,000 கோடி திட்டம் :
மின் உற்பத்தியை அதிகரிக்கும் அதே வேளையில், மின் வினியோகத்தை சீராக்க வேண்டிய கட்டாயம்உள்ளது. இதற்காக, தமிழகத்தில், மின் கட்டமைப்பு மற்றும் தொடரமைப்பு, சீர் செய்யப்படும். இந்த திட்டம், 5,000 கோடி ரூபாய் செலவில், மேற்கொள்ளப்படும். இதற்கு, ஜப்பான் நிறுவனம், 3,572 கோடி ரூபாய் கடன் வழங்கும். இந்த கடனுக்கு, ஆண்டுக்கு, 0.55 சதவீதம் சலுகை வட்டி கிடைக்கும்.கடன் பெற்ற, 10 ஆண்டுகளுக்குப் பின், 20 ஆண்டுகளில் திரும்ப செலுத்தும் கடனாகவும் இருக்கும். இத்திட்டம் மூலம், சென்னை மின் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டு, சீரான மின் வினியோகம் உறுதி செய்யப்படும்.ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவன நிதி உதவியுடன், 2,750 கோடி ரூபாயில், 400 கிலோ வாட் திறன் கொண்ட, ஐந்து புதிய துணை மின் நிலையங்களும், அதற்குரிய மின் தொடர் பாதைகளும் அமைக்கப்படும். புதிய துணை மின் நிலையங்கள், சென்னை கிண்டி, கொரட்டூர், மணலி, ஒட்டியம்பாக்கம், கோவை காரமடை ஆகிய பகுதிகளில் அமைக்கப்படும்.

இவை தவிர, 822 கோடி ரூபாய் செலவில், 230 கிலோ வாட் திறன் கொண்ட, 14 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்.சென்னை ஆலந்தூர், அம்பத்தூர் 3வது பிரதான சாலை, சென்னை சென்ட்ரல், ராஜா அண்ணாமலைபுரம், மின்வாரிய தலைமையகம்; திருப்பூரில், திருப்பூர் மற்றும் கருவலூர்; மதுரை கிண்ணிமங்கலம்; தஞ்சை கும்பகோணம்; அரியலூர் பொய்யூர்; திருவண்ணமாலை புரிசை; விருதுநகர் சவ்வாஷ்புரம்; ஈரோடு செண்பகபுதூர்; காஞ்சிபுரம் ஆகிய இடங்களில், இந்த துணை மின் நிலையங்கள் அமையும்.தென் மாநிலங்களுக்கு இடையே, மின் பகிர்மாற்றம் செய்வதற்கு, வேலூர் திருவலத்தில், 765 கிலோ வாட் திறன் கொண்ட, புதிய துணை மின் நிலையம், இந்திய தொடரமைப்பு நிறுவனத்தால் அமைக்கப்படுகிறது. இதைப் பயன்படுத்தி, பிற மாநிலங்களிலிருந்து, அதிகளவு மின்சாரம் பெற, திருவலத்தில் துணை மின் நிலையம் அமைக்கப்படும். 400 கிலோ வாட் திறன் கொண்ட இந்த மையத்துக்கு, 1,000 கோடி ரூபாய்மதிப்பிடப்பட்டுள்ளது. மின் தொடர்கள் அமைக்கும் பணி, நடப்பாண்டே துவங்கும்.இவ்வாறு, ஜெயலலிதா கூறினார்.

காற்றாலை மின்சாரத்தை கொண்டு வர தனி பாதை : காற்றாலை மற்றும் சூரிய மின் சக்தியால் கிடைக்கும் மின்சாரத்தை, மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்லவும், மின் உற்பத்தி அதிகரிக்கும் போது, உபரி மின்சாரத்தை செலுத்தும் வகையில், மின் தொடரமைப்பு இல்லை. இதனால், கிடைக்கும் மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்த முடிவதில்லை.இந்த குறையைப் போக்க, மாநிலத்தின் தென் பகுதியில் உற்பத்தியாகும் காற்றாலை மின்சாரத்தை, முழுமையாகப் பயன்படுத்த, நெல்லை மாவட்டம் கயத்தாறிலிருந்து, சென்னைக்கு மின்சாரத்தை கொண்டு வர, 1,488 கி.மீ., நீளத்துக்கு, 400 கிலோ வாட் மின் பாதை, 2,300 கோடி ரூபாய் செலவில், அமைக்கப்படுகிறது. இதைப் போல், கோவை,உடுமலைப்பேட்டை, தேனி பகுதிகளில் உற்பத்தியாகும் காற்றாலை மின்சாரத்தை கொண்டு வர, மின்பாதை அமைக்கப்படும். இதற்காக, தேனி தப்பகுண்டு; கோவை ஆனைக்கடவு, ராசிபாளையம் ஆகிய இடங்களில், 400 கிலோவாட் திறன் கொண்ட, துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும். இதை கடத்திச் செல்ல, 788 கி.மீ., நீளமுள்ள, 400 கிலோ வாட் மின் பாதை அமைக்கும் பணிகள் துவங்கப்படும். இத்திட்டத்திற்கு, 1,230 கோடி ரூபாய் செலவிடப்படும்.இவற்றோடு, நெல்லை கானார்பட்டியில், 150 கோடி ரூபாய் செலவில், 400 கிலோவாட் திறன் கொண்ட துணை மின் நிலையம் அமைக்கப்படும்.

1,000 மெகா வாட் மின்சாரம் மாதந்தோறும் கொள்முதல் : மின் பற்றாக்குறையைப் போக்க, புதிய மின் உற்பத்தி நிலையங்களை துவக்குவதுடன், பற்றாக்குறையை, 85 சதவீதம் வரை ஈடு செய்ய, நீண்ட கால அடிப்படையில், மின் கொள்முதல் செய்ய, ஒப்பந்த புள்ளிகள் கோரப்படும்.முதல்கட்டமாக, அக்டோபர் மாதம் முதல், மாதத்துக்கு 1,000 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படும். மாதந்தோறும் செய்யப்படும் கொள்முதல், அடுத்த, 15 ஆண்டுகள் நீடிக்கும்.இவ்வாறு, ஜெயலலிதா கூறினார்.(Courtesy-Dinamalar)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>