மின்சாரம் என்கிற விவகாரம்

elctriநம் நாட்டின் மிகப்பெரிய பிரச்னையாக மின்சாரத் தட்டுப்பாடு உருவாகியுள்ளது. இன்றைய நிலைமையில் தென்மாநிலங்கள், குறிப்பாக தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம் இரண்டும், மின்வெட்டுப் பிரச்னையால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

கோயமுத்தூரிலுள்ள சிறு மற்றும் குறுந்தொழில் அமைப்புகள் வரும் கோடைகாலத்தில் தங்கள் தொழிற்சாலைகளை நடத்த முடியாது எனும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுவோம் என எண்ணுகிறார்கள். காரணம் மின்வெட்டுக் காலங்களில் தொழிற்சாலைகளில் மின் உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படும் டீசல் ஜெனரேட்டர்களில் உபயோகப்படுத்தப்படும் டீசலின் விலை கடுமையாக அதிகரித்து விட்டிருப்பதால் ஜெனரேட்டர் மின்சாரம் தங்களது உற்பத்திச் செலவைக் கடுமையாக அதிகரித்துவிடும் என சிறு மற்றும் குறுந்தொழில் உற்பத்தி ஆலை அதிபர்கள் பயப்படுகின்றனர்.

தமிழ்நாடு மின்சாரம் உபயோகிப்போர் சங்கத்தின் தலைவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் தமிழ்நாடு மின்சார வாரியம் சமீபகாலத்தில் வெளியிட்ட ஓர் அறிவிப்பின்படி வரும் செப்டம்பர் மாதத்திற்குள் இன்றைய மின்பற்றாக்குறை 4,000 மெகாவாட்டிலிருந்து 700 மெகாவாட்டாகக் குறையும் எனக் கூறப்பட்டிருப்பதை அவர்கள் நம்பவில்லை எனவும், கோடைக்காலத்தில் அதிக அளவில் குளிர்சாதனங்கள் உபயோகிக்கப்பட்டு மின்சாரத் தட்டுப்பாடு கூடுவதற்குத்தான் வாய்ப்புதான் அதிகம் என்றும் கூறியுள்ளார்.

தென்மாநிலங்களின் மின்தொகுப்பின் தட்டுப்பாடு 2011-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 3 சதவிகிதமாக இருந்தது. ஜனவரி, 2013-இல் இந்தத் தட்டுப்பாடு 16 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் பகல் நேரத்தில் தொழிற்சாலைகள் 6 முதல் 7 மணி நேரம்தான் இயங்க முடியும். மாலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை மின்சாரத்தைத் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உபயோகிக்க முடியாது. காரணம், இந்த நேரத்தில் தெரு விளக்குகள் மற்றும் வீடுகள் ஆகியற்றின் மின் தேவைகள் உச்சக்கட்டத்தில் இருக்கும்.

ஆந்திர மாநிலத்தில் இந்த மார்ச் மாதத்திலிருந்து பெட்ரோலிய வாயு உபயோகிக்கும் மின் உற்பத்தி மையங்களுக்கு எரிவாயு சப்ளைகள் முழுமையாக நிறுத்தப்பட்டுவிட்டன. இதனால் மின் உற்பத்தி பெரிய அளவில் குறைந்து கிராமப்புறப் பகுதிகளுக்கு 12 மணிநேர மின்வெட்டு அமலில் உள்ளது. தாலுகா தலைநகரங்களில் 6 மணி நேர மின்வெட்டு நிலவுகிறது.

தொழிற்சாலைகளுக்கு மின்சார சப்ளை முழுமையாக நிறுத்தப்பட்டு விட்டதால் அவை டீசல் ஜெனரேட்டரில் தயாராகும் மின்சாரத்தில்தான் இயங்குகின்றன. அதனால், உற்பத்திச் செலவு அதிகம் என்பதால் வாரத்தில் மூன்று நாள்களுக்கு விடுமுறை அளித்துவிடும் வழக்கத்தை பல தொழிற்சாலைகள் கையாள்கின்றன.

தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களின் மின் தேவைகள் அதிகரிப்பதைக் கணக்கிலெடுத்துக்கொண்டு மின் உற்பத்தியைப் பெருக்கும் பணியை அந்த இரு மாநில அரசின் மின்சாரத் துறை செய்யவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

தமிழ்நாட்டின் மின் தேவையில் 30 சதவிகிதம் அரசின் மின்சார வாரியத்தின் கீழ் இயங்கும் உற்பத்தி நிலையங்களிலிருந்து பெறப்படும். ஆந்திரத்தில் இதுபோல் பெறப்படும் மின்சாரம் 40 சதவிகிதம். 2008-ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உற்பத்தி 20 சதவிகிதம் குறைந்திருக்கிது. அப்போதே தொலைநோக்குப் பார்வையுடன் எதிர்பார்த்து செய்யப்பட்டிருக்க வேண்டியதை அன்றைய திமுக அரசு செய்யாமல் மெத்தனமாக இருந்துவிட்டதுதான் பிரச்னை இந்த அளவுக்குத் தீவிரமானதற்குக் காரணம்.

அதிமுக அரசு பதவியேற்றபின் முதல்வர் ஜெயலலிதா முதன்முறையாக மின்கட்டணத்தை உயர்த்தியும், புதிய மின் உற்பத்தி திட்டங்களைத் தொடங்கியும் சூரிய ஒளியின் மூலம் மின் உற்பத்தி செய்யும் நவீன திட்டத்தை அமல்படுத்தியும் பல தீவிர நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார்.

ஆந்திர மாநிலம் பெட்ரோலிய எரிவாயுவின் தட்டுப்பாட்டை நீக்க ரிலையன்ஸ் கேஜிடி – 6 எனும் பெட்ரோலிய உற்பத்தியை அனுமதிக்க மத்திய அரசின் உத்தரவைப் பெற்றது. ஆனால், அந்த உற்பத்தி மையத்தால் எதிர்பார்த்த அளவு எரிவாயு உற்பத்தி செய்ய முடியவில்லை.

மாநில அரசின் மின்சார வாரியத்தின்கீழ் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்கள் தயாரித்து வழங்கும் மின்சாரத்தின் விலைதான் மலிவாக இருக்கும். அதற்கு அடுத்தபடியாக தேசிய அளவில் இயங்கும் மத்திய அரசின் உற்பத்தி மையங்களான என்.டி.பி.சி.யின் மின்சாரம் மலிவு விலையில் மின் வாரியங்களுக்குக் கிடைக்கும். இவற்றின் மூலமாகக் கிடைக்கும் மின்சாரம் போதுமானதாக இல்லை எனில் தனியாரின் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து மாநில மின்சார வாரியம் மின்சாரம் வாங்க வேண்டும். இந்த மின்சாரத்தின் விலை அதிகம்.

இதுபோன்ற சூழ்நிலையில் மின்கட்டணத்தை உயர்த்தாமல் இருக்கும் காரணத்தால் மின்சார வாரியங்களின் நஷ்டம் அதிகமாகி, மிக அதிக அளவில் வங்கிகளில் கடன் பெற்று, இந்த வாரியங்கள் தனியார் மின் வாரியங்களுக்கு அவர்கள் தயாரித்து வழங்கும் மின்சாரத்துக்குப் பணம் செலுத்துகின்றன. கடன் தொகை அதிகமாகிவிட்டபின், வட்டிகளின் சுமைகளும் அதிகமாகி, தனியார் மின்சார உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய பணம் தாமதமாக வழங்கப்படுகிறது. இதனால் புதிய மின் உற்பத்தி நிலையங்களைத் தொடங்கத் தனியார் தயங்கும் நிலை தமிழ்நாட்டிலும் ஆந்திரத்திலும் உருவாகியுள்ளது.

மின்சாரம் இல்லாமல் உற்பத்தி இல்லை என்பதால் பொருளாதார வளர்ச்சியும் இல்லை என்ற நிலைமை நம் நாட்டின் எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும் எனும் உண்மையை மத்திய அரசு மறந்தது ஏன் என்ற கேள்வி எழுகிறது. வட மாநிலங்களில் உள்ள மின்சார தொகுப்புக்கான கட்டமைப்பு, தென்மாநிலங்களில் இல்லை என்பதால் அதிக மின்சாரம் உற்பத்தியாகும் வடமாநிலங்களிலிருந்து தென் மாநிலங்களுக்கு மின்சாரத்தைக் கொண்டுவர முடியவில்லை. இதைச் சரிசெய்ய போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு செயல்பட வேண்டிய மத்திய அரசு அதைக் கவனிக்கவே இல்லை.

2011-ஆம் ஆண்டுக் கணக்குப்படி நம் நாட்டின் தொழிற்சாலைகள் 45 சதவிகிதமும், வீடுகளும் குடியிருப்புகளும் 22 சதவிகிதமும், விவசாயம் 18 சதவிகிதமும் வியாபார நிறுவனங்கள் 9 சதவிகிதமும் மொத்த மின்சாரத்தை உபயோகிக்கின்றன. அதே புள்ளிவிவரப்படி நாம் உற்பத்தி செய்யும் மின்சாரம் 57 சதவிகிதம் நிலக்கரியிலிருந்தும், 9 சதவிகிதம் பெட்ரோலிய எரிவாயுவிலிருந்தும் உற்பத்தி செய்யப்படுகின்றன. மீதம் நீரோட்டத்திலிருந்தும் காற்றாலைகளின் மூலமாகவும் தயாரிக்கப்படுகின்றன. நிலக்கரியே மின் உற்பத்திக்கான மிக அதிகமான மூலப்பொருள் என்ற நிலையில் நமது நாட்டில் அதன் ஆண்டு உற்பத்தி 55 கோடி டன்கள். நாம் ஓராண்டில் இறக்குமதி செய்யும் நிலக்கரியின் அளவு 13 கோடியே 50 லட்சம் டன்கள். இதனால் செலவாகும் அன்னியச் செலாவணி மிக அதிகம். இதுபோன்ற நிலைமையில் மத்திய அரசு எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கைகள் பல இருக்கின்றன.

முதலாவதாக, நம் நாட்டில் பல இடங்களுக்கும் எடுத்துச் செல்லப்படும்போதும், தேவையான இடங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும்போதும் 27 சதவிகித மின்சார இழப்பீடு உள்ளது. இது தேசிய அளவில் ஏற்படும் சராசரி இழப்பீடு. ஜார்க்கண்ட் மாநிலத்தில் 40 சதவிகிதமும், பிகார், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் 30 சதவிகிதமும் இழப்பீடு உள்ளது.

இதை தென் கொரியா நாட்டின் 4 சதவிகித சைனாவின் 7 சதவிகித இழப்பீடுகளுடனும், உலகின் சராசரி 9 சதவிகித இழப்பீடுகளுடன் ஒப்பிட்டால் நமது மின்சார வாரியங்களின் நிர்வாகச் சீர்கேடு நமக்குப் புரியும். இதற்கான காரணம் மின்சாரத் திருட்டே எனலாம். கடுமையான நடவடிக்கைகள் மூலம் இதைச் சரிசெய்யலாம்.

இரண்டாவதாக, மிக அதிக அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் மேலை நாடுகளில்கூட தேவைக்கு மேல் மின்சாரத்தை உபயோகிக்கும் பழக்கம் கிடையாது. உதாரணமாக தொழிற்சாலைகள் ஆறு நாள்களில், தினமும் 8 மணி நேரம் என்ற கோட்பாட்டுடன் வாரத்துக்கு 48 மணி நேரம் வேலை செய்கின்றன. இதுபோலவே கடைகளும் வியாபார நிறுவனங்களும் பகலில் மட்டுமே திறந்திருக்கும் என்ற நிலைமை மேலை நாடுகளில் உண்டு. இரவில் இயங்கும் சினிமா தியேட்டர்கள், மால்கள், கடைகள் ஆகியவை தங்கள் சொந்த ஜெனரேட்டர்களிலிருந்து மின்சாரம் பெற வேண்டும். அரசு மின்சாரம் அவைகளுக்கு அளிக்கப்படுவதில்லை.

மூன்றாவதாக, பணக்கார நாடுகளான அமெரிக்காவிலும் ஜெர்மனியிலும் மேட்டுக்குடியினரின் பங்களாக்கள் நிறைந்த குடியிருப்புப் பகுதிகளில் தெருவிளக்குகள் கிடையாது. பணக்காரர்களின் ஆடம்பர பங்களாக்களே தங்களுக்குத் தேவையான மின் ஒளியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நெறிமுறை வழக்கத்தில் இருக்கிறது.

கடைசியாக, நமது மின்கட்டணத்தைச் சீராக அமைக்க வேண்டும் என்பதை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக உணர வேண்டும். இன்றைய நிலவரப்படி வியாபார அமைப்புகள் ஒரு யூனிட்டுக்கு 5 ரூபாய் 80 பைசாக்களும், தொழிற்சாலைகள் ரூ. 5-ம், குடியிருப்புகள் 3 ரூபாய் 80 பைசாக்களும் கட்டணமாகச் செலுத்துகின்றன.

பெரிய சினிமா தியேட்டர்கள், மால்கள், நட்சத்திர ஓட்டல்கள் வண்ண விளக்குகளில் மிதந்துகொண்டு குறைந்த விலை கொடுத்து மின்சாரம் வாங்குகின்றன. இவை சமூகத்தில் உயர் மட்டத்தில் வசிக்கும் குறைந்த எண்ணிக்கையிலுள்ள பணக்காரர்களுக்குச் சேவை செய்வதால் இவற்றின் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படுவதுதான் நியாயம். மின்வெட்டு அமலில் இருக்கும்போது இந்த அமைப்புகள் டீசலை உபயோகித்துத் தயாரிக்கும் மின்சாரத்தின் விலை எவ்வளவோ, அந்த அளவு மின் கட்டணத்தை, அதாவது ரூபாய் 9 முதல் 10 வரை மின்வாரியத்துக்குச் செலுத்த முடியும். அவர்களிடமிருந்து அந்தக் கட்டணங்களை ஏன் அரசு வசூலிக்கக்கூடாது?

நாம் பொருளாதாரத்தில் முன்னேறி ஒரு பெரிய வல்லரசாக 2030-ஆம் ஆண்டுக்குள் உருவாக வேண்டும் எனில் மேலே கூறிய பல அம்சங்களையும் ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். அதைவிடுத்து வாக்கு வங்கி அரசியலை மனதில்கொண்டு மின்சாரப் பிரச்னை மாநிலங்களின் தலைவலிதானே என்ற மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு செயல்பட்டால் நாட்டின் முன்னேற்றத்தில் இவர்களுக்கு அக்கறை இல்லை என்பதுதான் பொருள்.

எட்டு சதவிகித வளர்ச்சி கிடைக்க வேண்டுமென்றால், உற்பத்தி பெருக வேண்டும். உற்பத்தி பெருக வேண்டுமென்றால் தடையில்லாத மின்சாரம் கிடைக்க மத்திய அரசு உதவ வேண்டும். மின்சாரம் மாநில அரசின் பிரச்னை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்தின் வளர்ச்சி பிரச்னையும்கூட என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.

By என். முருகன்  கட்டுரையாளர்: ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி.(Courtesy-Dinamani.com)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>